search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் போராட்டம்"

    இரவில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொன்னேரி பஸ்நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம், பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் பொன்னேரி பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் செல்லவில்லை.

    இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று திரும்பிய பயணிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி போலீசார், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பொன்னேரி பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் கூறும்போது, ‘பஸ் சரியாக குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. அதிகாரிகளை கேட்டால் சரியாக பதில் கிடையாது. நிறுத்தப்பட்ட பஸ்கள் குறித்து அறிவிப்பு பலகையில் குறிப்பிடுவது கிடையாது. மேலும் பஸ்களை மாற்றி இயக்கப்படுகின்றன’ என்றனர்.

    2 மணி நேரம் கால தாமதம் வந்த நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலை பாதியில் நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவை- நாகர்கோவில் இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினசரி காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்று சேரும், இதே போல நாகர்கோவிலில் தினசரி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கோவைக்கு வந்து சேரும். இந்த ரெயிலில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்பட ஏராளமானோர் தினசரி சென்று வருகின்றனர்.பாசஞ்சர் ரெயில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினசரி 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து சேர்வதாக புகார் எழுந்தது. இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    நேற்று காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரெயில் 2 மணி நேரத்துக்கு மேலாக கால தாமதமாக வந்து கொண்டு இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயில் இருகூர் அருகே வந்து கொண்டு இருந்த போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள், போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் ரெயில் அங்கு இருந்து 1 மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு கோவைக்கு வந்து சேர்ந்தது. #tamilnews
    ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மின்சார ரெயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    பரங்கிமலை ரெயில் விபத்திற்கு பிறகு மின்சார ரெயில்கள் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    பாஸ்ட் ரெயில்கள் அனைத்தும் சாதாரண மின்சார ரெயில்களாக இயக்கப்படுகின்றன. இதனால் கடந்த 2 வாரமாக ரெயிலில் அடிபட்டு உயிர் இழக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் இடையே இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் தற்போது அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வதால் தாமதமாக செல்வதாக புறநகர் ரெயில் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்று காலை ரெயில் மறியலில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பயணிகள் செங்கல்பட்டு-கடற்கரை மின்சார ரெயில் பாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். விரைவு மின்சார ரெயிலை இயக்காததால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், கல்லூரிகளுக்கு போக முடியவில்லை என்ற குற்றச்சாட்டை கூறி தண்டவாளத்தில் அமர்ந்தனர்.

    இதனால் மின்சார ரெயில் சேவை இரு மார்க்கமும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. மின்சார ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.

    செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரெயிலையும் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அதிகாரிகள் பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

    செங்கல்பட்டில் இருந்து முன்பு காலை 8.15 மணிக்கு விரைவு மின்சார ரெயில் புறப்பட்டு வரும். இந்த ரெயிலில் பயணம் செய்தால் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள் சரியான நேரத்திற்கு சென்று வந்தனர். அந்த ரெயில் இப்போது சாதாரன மின்சார ரெயிலாக மாற்றி காலை 8.30 மணிக்கு புறப்படுவதால் தாமதமாக பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவு மின்சார ரெயிலாக அதனை மீண்டும் இயக்க வேண்டும். அப்போதுதான் புறநகர் பயணிகளுக்கு அது உதவியாக இருக்கும் என்றனர். #ChengalpattuTrain
    ஈரோட்டில் நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவரை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தர்மபுரியில் இருந்து ஊட்டிக்கு நிறைமாத கர்ப்பிணியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று அழைத்து சென்றனர். இதற்காக அவர்கள் தர்மபுரியில் இருந்து ஈரோட்டிற்கு ரெயிலில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊட்டிக்கு பஸ்சில் செல்வதற்காக ரெயில் நிலையத்தில் இருந்து டவுன் பஸ் ஏறி ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்றனர். பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலாக இருந்ததால் அந்த பஸ்சின் டிரைவர் அதை நடுவழியில் நிறுத்தினார். இதனால் பயணிகள் அந்த பஸ்சில் இருந்து இறங்க தொடங்கினர்.

    அப்போது சென்னிமலையில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மற்றொரு அரசு டவுன் பஸ் பின்னால் வந்து நின்றது. இதனால் அந்த பஸ்சின் டிரைவர் முன்னால் நின்ற பஸ்சின் டிரைவரை எச்சரிப்பதற்காக ஏர்ஹாரனை அழுத்தி கொண்டே இருந்தார். ஆனால் பயணிகள் தொடர்ந்து இறங்கி கொண்டு இருந்ததால் முன்னால் உள்ள பஸ் நின்று கொண்டே இருந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ்சின் டிரைவர் கீழே இறங்கி வந்தார். மேலும், முன்னால் நின்ற பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகளை அவர் எச்சரித்தார். அப்போது கர்ப்பிணி பெண்ணும் இறங்கி வந்ததால், டிரைவர் அவரை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதைபார்த்த கர்ப்பிணியின் உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த டிரைவருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். உடனடியாக மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் விரைந்து சென்று உறவினர்களையும், பயணிகளையும் சமாதானம் செய்தனர். அதற்குள் கர்ப்பிணியை தாக்கியதாக கூறப்படும் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நிறைமாத கர்ப்பிணியின் பெற்றோர் கூறியதாவது:-

    நாங்கள் ஊட்டியை சேர்ந்தவர்கள். எனது மகள் சங்கீதாவுக்கு தர்மபுரியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளோம். அவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி ஊட்டிக்கு அழைத்து செல்வதற்காக நாங்கள் ஈரோட்டிற்கு வந்தோம். ஈரோடு பஸ் நிலையத்தில் டவுன் பஸ்சில் வந்து இறங்கும்போது பின்னால் வந்த அரசு பஸ்சின் டிரைவர் எங்களது மகளை எட்டி உதைத்தார்.

    எனவே அந்த டிரைவரை கைது செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அதற்கு போலீசார், “புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட டிரைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஈரோடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மற்ற பஸ்களை பயணிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க மாநில தலைவருமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சேலம் மாவட்டத்தில் நேற்று சில அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த காரணங்களால் மாலையில் சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு இயக்கப்படும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பஸ்களுக்காக காத்திருந்தனர். பின்னர் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டு சென்ற மற்ற பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பஸ் டிரைவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசாருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீசார் போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பேரில் மேட்டூருக்கு 3 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் போலீஸ் பாதுகாப்புடன் மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    ×